என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
--------------------------------------------------------------------------------
திருப்பூர், ஜூலை 4-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி எல்ஐசி மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலி என்எல்சி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதென்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தொலைத் தொடர்பு ஊழியர் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்என்இஏ சங்கத்தைச் சேர்ந்த பழனிவேல்சாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், என்எப்டிஇ சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜெகநாதன், எப்என்டிஓ சங்க நிர்வாகி தனபதி, ஏடிபி சார்பில் ஜான் சாமுவேல் ஆகியோர் மத்திய அரசின் பொதுத்துறை பங்கு விற்பனை முடிவைக் கண்டித்து உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணக்குத்துறை அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கேசவன் நன்றி கூறினார்.
கோவை
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க முயலும் மத்திய அரசை கண்டித்து தொலைதொடர்பு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மெயின் எக்ஜேஞ் அருகில் வியாழனன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல்.யு வின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். என்.எப்.டி சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணன், எஸ்.என்.இ.ஏ வின் பிரசன்னா, அதிகாரி சங்கங்களின் சார்பில் உஸ்மான் அலி, பி.எஸ்.என்.எல்.யு சார்பில் வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கே.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
உதகை
அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உதகையில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். முகவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக எல்ஐசி ஊழியர் சங்கத்தின் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.