Sunday, December 4, 2011

புதிய பெயரில் ஓய்வூதிய உரிமை பறிப்பு

புதிய பெயரில் ஓய்வூதிய உரிமை பறிப்பு

மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் என்றால் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு எப்போதும் உண்டு என்ற நிலை காலங்காலமாக இருந்து வந்தது. குறிப்பாக, அரசு ஊழியர்களின் ஓய் வூதிய உரிமை கடைசிக் காலத்தில் அவர்களுக் கான பாதுகாப்பு அரணா கத் திகழ்ந்து வருகிறது. அதனையும் அகற்றி, ஊழியர்களை கடைசிக் காலத்தில் நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்துவதற்கான வேலைகளை மத்திய அரசு முழுமூச்சுடன் செய்து வருகிறது.

இந்த நாசகரத் திட்டத்திற்கு 2003ம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான அரசே அடித் தளம் அமைத்துக் கொடுத்தது. அதாவது, ஓய்வூ தியத் திட்டம் என்று பயன்பாட்டில் இருந்து வந்த திட்டத்தை, ஒரே அரசு உத்தரவின் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயரை மாற்றியது. பெயரை மட்டுமல்லாமல் அதன் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் விதத்தில், ஓய்வூ தியப் பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்திற் கும் பகிர்ந்தளிக்கலாம் என ஒப்புதலும் வழங் கியது. அன்று முதல் அரசு ஊழியர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின் றனர். ஆனால் அதனையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தி வருகின்றன.

இதுவும் போதாது என்று தற்போது காங்கிரஸ், திமுக தலைமையிலான மத்திய அரசு புதிய ஓய் வூதியத் திட்டம் என்ற பெயரை மீண்டும் மாற்றி யிருக்கிறது. அதன்படி, அதற்கு பென்சன் நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா எனப் பெயர் வைத்திருக்கிறது. இதன்மூலம் இது வரை பங்குச் சந்தை சூதாட்டத்திற்கு பகிர்ந்தளிக் கப்பட்ட பணம், இனி பன்னாட்டுக் கம்பெனி களின் கொள்ளை லாபத்திற்கும் பகிர்ந்தளிக்கப் படும் என பறைசாற்றியிருக்கிறது. குறிப்பாக ஓய் வூதியப் பணத்தை பங்குச்சந்தையில் சூதாட சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது. இந்த சட்ட மசோதா இதே வடிவில் நிறைவேற்றப் பட்டால், இனி வரும் காலங்களில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பல்வேறு வகைகளில் ஓய்வூதிய நிதியை கேள்வி கேட் பாரின்றி சூறையாடிக்கொள்ளலாம் என்பதே இந்த மசோதாவின் சாரமாக இருக்கிறது.

இத்திட்டம் முழுக்க முழுக்க அரசு ஊழியர் களின் ஓய்வூதிய உரிமையைப் பறிக்கும் திட்ட மாகவே மாறியிருக்கிறது. இதே பாணியைப் பின் பற்றிய அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடு களின் நிலை என்ன ? பொருளாதார நெருக்கடி யின் போது முதலில் ஓய்வூதிய நிதியே கார்ப் பரேட் கம்பெனிகளால் சூறையாடப்பட்டது. அதனை நம்பியிருந்த லட்சக்கணக்கான ஊழி யர்கள் நடுத்தெருவில் விடப்பட்டனர். இதை யெல்லாம் தெரிந்தும் காங்கிரஸ், திமுக தலைமை யிலான மத்திய அரசு அதே வழியைப் பின்பற்ற முயல்வது ஏன்? யாருடைய நலனுக்காக இந்த அவசரம்? இத்திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளை மன் மோகன் அரசு நிராகரித்தது ஏன்? என்ற கேள்வி களுக்கெல்லாம் பதிலில்லை. யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; கார்ப்பரேட் கம்பெனி களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் கொள்ளை லாபம் கொழிக்கச் செய்வதே எங்களின் தலையாய பணி என்று காங்கிரஸ், திமுக தலை மையிலான மத்திய அரசு செயலாற்றி வருகிறது.

இந்த தேசவிரோத, மக்கள் விரோத மசோ தாவை எதிர்த்து முறியடித்திட அனைத்து பகுதி மக்களும் முன்வர வேண்டும்.