பரிதாப நிலையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள்
================================================
எஸ்.ஸ்ரீதுரை
09 Aug 2010
நமது நாட்டில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களில் மிக முக்கியமானது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.
எத்தனையோ தனியார் நிறுவனங்கள் அந்தச் சேவைகளை வழங்கிவந்தாலும், லாப நோக்கமில்லாமல் கிராமப்புறங்களில்கூட தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவருவது பி.எஸ்.என்.எல். நிறுவனம்தான்.
பி.எஸ்.என்.எல். என்ற அரசுத்துறை நிறுவனம் அலைபேசி (செல்போன்) சேவையை வழங்கத் தொடங்கியதால்தான், அதுவரை இன்கமிங் அழைப்புகளுக்கும் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளை லாபம் ஈட்டிவந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டன. நிமிடத்துக்கு பத்துப் பைசா, நொடிக்கு ஒரு பைசா என்றெல்லாம் அப்போது இணைப்புக் கொடுக்கிறபோதும் லாபம் பார்க்கும் அந்தத் தனியார் நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல். அலைபேசிச் சேவைக்கு வருவதற்கு முன்பு அடித்த லூட்டி எத்தகையது என்பதை இப்போது கற்பனை கூடச் செய்ய முடியாது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இப்போது 3 லட்சம் நிரந்தர ஊழியர்களும், 1 லட்சம் ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர் என்றாலே தெரிந்துவிடுமே அவர்களது பணி நிரந்தரமானது இல்லை என்று.
""கட்டணம் கொடுத்து வேலை வாங்கு; வேலை முடிந்ததும் துரத்திவிடு'' என்ற தனியார்துறை சித்தாந்தத்தை அரசுத்துறைகளும் கையாளத் தொடங்கியதே இந்த அவலத்துக்குக் காரணம் எனலாம். ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காக வரவு செலவுக் கணக்கில் (பட்ஜெட்டில்) ஆண்டுதோறும் அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், 1986 முதலே மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பெரிய அளவில் ஆளெடுப்புகள் நடைபெறவில்லை.
"டிபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம்' ஆக இருந்து, இப்போது பி.எஸ்.என்.எல். ஆக மாறியுள்ள துறையிலும் இதுவே உண்மைநிலை.
அவ்வப்போது ஒரு சில நூறு தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர் போன்ற பதவிகளுக்கு ஆள் எடுக்கப்பட்டாலும் லைன்மேன், கிளர்க், டெலிபோன் ஆபரேட்டர் போன்ற பதவிகளுக்கு ஏறக்குறைய புதிய நியமனங்களே இல்லை எனலாம்.
முன்பெல்லாம் லைன்மேன்களுக்கு உதவியாகப் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த தாற்காலிகப் பணியாளர்களில் பெரும்பாலோர் பணிநிரந்தரம் பெற்று டெலிகாம் மெக்கானிக் போன்ற பணிகளுக்கு வந்துவிட்டதால், மேற்படி கேஷுவல் மஸ்தூர் மற்றும் ஆபீஸ் பியூன் போன்ற பணிகளை "காண்ட்ராக்ட் லேபர்கள்' எனப்படும் ஒப்பந்த ஊழியர்களே செய்துவருகிறார்கள்.
முன்பு கேஷுவல் மஸ்தூர்களுக்கு 10 ஆண்டுகள் ஆனாலும்கூட பணிநிரந்தரம் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஏனெனில் அவர்கள் நேரடியாக டிபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம்-இல் சம்பளம் பெற்று பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போதைய ஒப்பந்த ஊழியர்களோ, பி.எஸ்.என்.எல்.-லின் நேரடி ஊழியர்கள் அல்லர். நிர்வாகத்தால் ஒப்பந்தம் செய்யப்படும் ஒப்பந்தக்காரர்களின் கீழ் பணி செய்பவர்கள். அந்த ஒப்பந்தக்காரர்கள் இவர்களுக்கென ஊதியத்தை பி.எஸ்.என்.எல்.-லிடமிருந்து பெற்று அதன்பின் தங்களது ஒப்பந்த ஊழியர்களுக்குப் பட்டுவாடா செய்கிறார்கள். அதிகபட்சமாக மாதம் மூவாயிரம் ரூபாய் வரை மட்டுமே தரப்படும் அந்தத்தொகைகூட ஒவ்வொரு மாதமும் தாமதமாகவே வழங்கப்படுவது வருத்தத்துக்குரியது. மிகக்குறைந்தபட்சமாக வழங்கப்படும் சொற்ப சம்பளத்தையும் இவர்கள் பெறுவதற்குப் படாதபாடு படவேண்டியிருக்கும்.
ஒரு காலத்தில் லைன்மேன், டெக்னீஷியன், டெலிபோன் ஆபரேட்டர், கிளர்க் போன்ற பதவி வகிப்போர் எத்தனை முக்கியமோ, அப்படி இன்றைய ஒப்பந்தப் பணியாளர்களும் பி.எஸ்.என்.எல்.-லின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டனர். உயிர்நாடி என்றே சொல்லலாம்.
உண்மையைச் சொல்வதானால் எந்தவொரு அலுவலக வேலையையும் செய் என்றால் மறுக்காமல் செய்கின்றவர்களே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள். இவர்களில் பலர் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, கம்ப்யூட்டர் தேர்ச்சி என்று பலதுறைத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பி.எஸ்.என்.எல். அரசுத்துறை நிறுவனம் என்பதால் என்றாவது ஒரு நாள் பணிநிரந்தரமும் பதவி உயர்வுகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிற இவர்களுக்கு வாரவிடுமுறை தவிர வேறு எந்தச் சலுகையும் கிடையாது. இவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஓர் அசட்டு நம்பிக்கையில் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளும் பெற்றுவிட்டனர். இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கென்று அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன.
பி.எஸ்.என்.எல். நிர்வாகமும், மத்திய அரசும் இந்த ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டாவது இவர்களுக்குப் பணிநிரந்தரமும் ஊதிய உயர்வும் வழங்கினால் பி.எஸ்.என்.எல்.-லின் சேவைகள் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
நன்றி தினமணி